தென் கொரியாவிடம் தோற்ற இலங்கை

IV
IV

பலம்பொருந்திய தென்கொரிய அணிக்கெதிரான கால்பந்தாட்டப் போட்டியில் 0 க்கு 5 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. 2022 இல் கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான ஆசிய வலய தகுதி காண் போட்டியின் எச் குழுவில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கான இரண்டாம் கட்ட போட்டிகள் தென் ‍கொரியாவில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் தென் கொரிய அணி, முதல் பாதியில் 3 கோல்களையும், இரண்டாவது பாதியில் 2 கோல்களையும் போட்டு மொத்தமாக 5 கோல்களை அசத்தலாக அடித்தது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு ஒரு கோலைக்கூட அடிப்பதற்கு தென் கொரிய பின்கள வீரர்கள் வாய்ப்புக் கொடுக்கவில்லை.

பீபா தரவரிசையில் 39 ஆவது இடத்திலுள்ள தென் கொரிய அணியை 204 ஆவது இடத்திலுள்ள இலங்கை அணி நேற்றைய தினம் எதிர்த்தாடியிருந்தது. சியோல் நகரிலுள்ள கொயாங் விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

போட்டியின் 15 ஆவது நிமிடத்தில் கிம் சின் வூக் தென் கொரியா சார்பில், முதல் கோலை அடித்ததுடன், லீ டோங் ஜியொங் இரண்டாவது கோலை அடித்திருந்தார். அதன்பின்னர் 43 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிம் சிக் வூக் கோலாக மாற்றி 3க்கு 0 என்ற கணக்கில் தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதைனையடுத்து, 53 ஆவது நிமிடத்தில் ஹுவாங் ஹீசேன் கோலொன்றை அடிக்க தென் கொரிய அணியினர் பரவசத்தில் திகைத்தனர்.

55 ஆவது நிமிடத்தில் இரட்டை மஞ்சள் அட்டை மூலமாக சிவப்பு அட்டை பெற்று இலங்கை வீரர் அசிக்கர் ரஹுமான் வெளியேறியபோது, இலங்கை அணி 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது.

இதனால் தென் கொரியா மேலும் 3,4 கோல்களை போடும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், இலங்கை பின்கள வீரர்களின் திறமையால் தென் ‍கொரிய அணியால் ஒரு கோலை மாத்திரமே (77 ஆவது நிமிடம்) அடிக்க முடிந்தது. போட்டியின் முழு நேர முடிவில் தென் கொரியா 5க்கு 0 என்ற கோல் கணக்கில் இலங்கை அணியை வென்றது.

2022 உலகக் கிண்ண ஆசிய வலயத்தின் எச் குழுவுக்கான இரண்டாம் கட்ட போட்டிகளில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள தென் கொரியா 4 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் சமநிலை அடைந்து 13 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. லெபனான் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், துர்க்மேனிஸ்தான் 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றன.

இப்போட்டித் தொடரில் ஒரு புள்ளியைக்கூட பெறாத இலங்கை 4 ஆவது இடத்திலும், இப்போட்டித் தொடரில் பங்கேற்காத வட கொரியா 5 ஆவது இடத்திலும் உள்ளன. இரண்டு கட்ட நிறைவில் இலங்கை அணிக்கெதிராக ‍மொத்தமாக 23 கோல்கள் அடிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை 2 கோல்களை அடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.