ஆடுகளத்தில் ஆவேசமடைந்த ஷகீப் அல் ஹசன்

fbhf
fbhf

பங்களாதேஷில் இடம்பெற்ற உள்ளூர் (டாக்கா ப்ரீமியர் லீக்) போட்டியொன்றின்போது, பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன் மோசமான நடத்தைகளை வெளிப்படுத்தியமை தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

ஷகீப் அல் ஹசன், துடுப்பாட்ட வீரரை நோக்கிப் பந்துவீசியிருந்தார். அதன்போது ஷகீப் ஆட்டமிழப்பு கோரிக்கை ஒன்றை முன்வைக்க, அக்கோரிக்கை நடுவரால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, நடுவரின் தீர்ப்புடன் உடன்படாத ஷகீப், பந்துவீச்சாளர் பக்கத்திலிருந்த விக்கெட்டை ஆவேசமாகக் காலால் உதைத்ததுடன், அதனை பிடுங்கி நிலத்தில் எறிந்தார்.

இந்தக் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருவதுடன், பலர் இதற்குக் கண்டனமும் தெரிவித்துவருகின்றனர்.

ஷகீப் இவ்வாறு மோசமான செயற்பாட்டை மேற்கொண்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இலங்கையில் நடைபெற்ற நிதஹல் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின்போது, ஆர். பிரேமதாஸ அரங்கின் கண்ணாடியொன்றை ஷகீப் காலால் உதைத்து நொறுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் சர்வதேச போட்டி சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்திலுள்ள, இருபதுக்கு இருபது சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் இரண்டாவது இடத்திலும் உள்ள ஒரு கிரிக்கெட் வீரரால் மேற்கொள்ளப்படும் மோசமான செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனப் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், பின்னர் இந்த சம்பவத்துக்காக ஷகீப் ஹல் ஹசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.