கோலியின் படையா? வில்லியம்சன் சேனையா?

1623983599 kohli 2
1623983599 kohli 2

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் நடத்தும் பலப்பரீட்சை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சீசன் இது. ஒருநாள், டி20 உலகக் கிண்ண போட்டிகள் இருப்பதுபோல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான உலகக் கிண்ண போட்டியே இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனலாம்.

9 அணிகள் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடிய டெஸ்ட் தொடர்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டு, அதில் முதல் இடத்தைப் பிடித்த இந்தியாவும், அடுத்த இடத்திலிருக்கும் நியூஸிலாந்தும் தற்போது இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. அவை சமபலம் கொண்ட அணிகள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இரு அணிகளுமே தங்களது கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தியே இந்த இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளன. இந்தியா கடந்த பிப்ரவரி – மார்ச்சில் தனது மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கிறது. நியூஸிலாந்தோ கடந்த 22 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்தை அதன் மண்ணிலேயே வீழ்த்தியிருக்கிறது. எனவே நல்லதொரு வெற்றி தரும் உத்வேகத்துடனேயே இரு அணிகளும் களம் காணுகின்றன.

இந்திய அணியைப் பொருத்தவரை, ஒரு தலைவர் கோலியின் திறமையும், பிம்பமும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனாலும், தோனியைப் போலவே ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க அவருக்கு ஒரு உலகக் கிண்ண வெற்றி தேவையாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அவருக்கான நல்லதொரு வாய்ப்பு.

பேட்டிங் பிரிவில் அனுபவ வீரர்களான சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே நல்லதொரு நிலையான ஆட்டத்தை வழங்கி நியூஸிலாந்து பெளலர்களை திணறடிப்பார்கள் என நம்பலாம். அதேபோல், அதிரடி வீரர்களான கோலி, ரோஹித் நிதானமாகவும், ஒட்டங்களை சேகரிக்கும் வகையிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அதுதவிர இளம் வீரர்களான ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஆகியோர் கூடுதல் வலு சேர்க்கின்றனர். ஆல்-ரவுண்டர் வரிசையில் ஜடேஜா, அஸ்வின் நம்பிக்கை அளிக்கின்றனர். வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, ஷமி, சிராஜ் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

நியூஸிலாந்தைப் பொருத்தவரை, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வேகத்தில் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. அதனால் இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அந்த அணி ஏற்கெனவே தன்னை தகவமைத்துக் கொண்டிருப்பது அதற்கான பலமாக இருக்கும்.

அணியின் துடுப்பாட்டத்தில் வில்லியம்சன், டீவன் கான்வே, ராஸ் டெய்லர், டாம் லதாம் உள்ளிட்டோர் இந்திய பெளலர்களை பதம் பார்க்க வாய்ப்புள்ளது. போல்ட், செளதி, கைல் ஜேமிசன், வாக்னர் ஆகியோர் இந்திய பேட்டிங்கை சரிக்கக் காத்திருக்கின்றனர். போட்டியே ஆனாலும், தேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கும் இந்தியர்கள், இந்த மோதலில் நிச்சயம் நியூஸிலாந்தின் ஆட்டத்தையும் ரசிக்கத் தவற மாட்டார்கள்.