தனது இரட்டைக் குழந்தைகளை வரவேற்றார் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்

60cfaa1fb8abe
60cfaa1fb8abe

ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டுக்கு இரட்டைக் குழந்தைகளாக இரு மகன்மார் பிறந்துள்ளனர்.

இரட்டைக் குழந்தைகளுக்கு போல்ட் தண்டர் மற்றும் செயிண்ட் லியோ என பெயர் வைத்து அவர்களை வரவேற்றார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரட்டை மகன்களின் பிறப்பை புகைப்படத்துடன் அறிவித்தார் போல்ட்.

அதில், உசைன் போல்ட் அவரது மனைவி காசி பென்னட், அவர்களின் மூத்த மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் ஆகியோர் தற்போது பிறந்த இரட்டையர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள்.

மூத்த மகளான ஒலிம்பியா லைட்னிங் போல்ட்டைப் போலவே பிறந்த ஆண் குழந்தைகளான இரட்டையர்களுக்கு தண்டர் மற்றும் செயிண்ட் லியோ என பொருத்தமான பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

இரட்டையர்கள் எப்போது பிறந்தார்கள் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்படவில்லை.

உசைன் போல்ட் ஜோடி கடந்த ஆண்டு தங்கள் முதல் குழந்தையான ஒலிம்பியா லைட்னிங் போல்ட்டை வரவேற்றனர்.

34 வயதான போல்ட், இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார், 2017 ஆம் ஆண்டில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

மார்ச் மாதத்தில் அவர் அளித்த செவ்வி ஒன்றில் போட்டியிடுவதற்கு பதிலாக விளையாட்டு மைதான பார்வையாளராக இருப்பதை விரும்புவதாக தெரிவித்தார்.

“நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் கூறினார். “ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்க, நீச்சல், கால்பந்து அல்லது அனைத்து நிகழ்வுகளையும் பார்க்க எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே ஒலிம்பிக்கை ஒரு உண்மையான ரசிகர் போல அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். “

11 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற போல்ட் 2009 ஆம் ஆண்டு பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் வேகத்தில் 9.58 வினாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார், அதே போல் அவர் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் 19.19 வினாடிகளில் ஓடி உலக சாதனைபடைத்தார்.

100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று ஓலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.