அயர்லாந்து அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

cricket
cricket

அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் சமப்படுத்தியது.

அயர்லாந்து நகரின் டப்லின் நகரில் நடைபெற்ற இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 3 ஆவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 346 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி கொக் மற்றும் ஜென்மன் மாலன் இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சிறந்த அடித்தளத்தை அமைத்ததுடன் தமக்கிடையில் 225 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

குயின்டன் டி‍ கொக் 91 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 11 பெளண்டரிகள் அடங்கலாக 120 ஓட்டங்களையும், ஜென்மன் மாலன் 169 பந்துகளில் 16 பெளண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 177 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

இது தென் ஆபிரிக்க வீரரொருவர் பெற்றுக்கொண்ட நான்காவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து முன்வரிசை வீரர்கள் வரிசையக தமது விக்கெட்டுக்களை தாரை வார்த்து அரங்கு திரும்பினர்.

ஒரு கட்டத்தில் 92 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தவித்த அயர்லாந்து அணியை கேர்ட்டிஸ் கெம்ப்பரும் கடைநிலை வீரரான சிமி சிங் இருவரும் தமது அணியை கெளரவமான நிலைக்கு இட்டனர்.

அயர்லாந்து அணி 47.1 ஓவர்களில் 276 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

கடைசி வரை போராடிய சிமி சிங் ஆட்டமிழக்காது சதம் அடித்தமை பலரது பாராட்டுக்களையும் பெற்றது. அவர் 91 பந்துகளில் 14 பெளண்டரிகள் அடங்கலாக ஆட்மிழக்காது 100 ஓட்டங்களை விளாசினார்.

பந்துவீச்சில் தப்ரெயிஸ் சம்ஸி, அண்டிலே பெலுக்குவாயே இருவரும் தலா விக்கெட்டுக்களை கைப்பற்றினர். போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தென் ஆபிரிக்க அணியின் ஜென்மன் மாலன் தெரிவானார்.