கொவிட் அச்சத்தால் இந்திய – இங்கிலாந்து 5 ஆவது டெஸ்ட் ரத்து!

1631247842155347
1631247842155347

எமிரேட்ஸ் ஓல்ட் ட்ராபோர்டில் இன்று ஆரம்பமாகவிருந்த இங்கிலாந்து மற்றும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்திய குழாமில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடனான கலந்துரையாடலின் பின்னர் போட்டியை  ரத்து செய்ய தீர்மானித்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

லண்டன் ஓவலில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான ரவிசாஸ்திரிக்கு கடந்த சனிக்கிழமை கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பரத் அருண் மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து, அணியின் உடலியக்கவியலாளர் (பிஸியோதெரபிஸ்ட்) நிதின் பட்டேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உதவி உடலியக்கவியலாளர் யோகேஷ் பார்மருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நேற்று முன்தினம் மாலை தொற்று உறுதியானது.

அவர் இந்திய அணி வீரர்களுடன் நெருங்கி பணியாற்றியதால் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

எனினும், எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று அறிவித்தது.