இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டி : இலங்கை அணி 228 ஓட்டங்கள் குவிப்பு!

cricket 1
cricket 1

19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று வருகிறது.

இதன் முதல் போட்டியில் இலங்கை 42 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நிலையில் இரண்டாவது போட்டி இன்று ஆரம்பமானது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் துனித் வெல்லாலகே தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக ஆரம்ப வீரராக களமிறங்கிய சதீஷ் ஜயவர்தன 58 ஓட்டங்களையும், 4 ஆம் இலக்க வீரராக களமிறங்கிய பவன் பத்திராஜ 51 ஓட்டங்களையும், 3 ஆம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாடிய ஜெவோன் டேனியல் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

எனினும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய சமிந்து விக்கிரமசிங்க 16 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார்.

பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டல் 3 விக்கெட்டுகளையும், அசிக்கூர் ஸமன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 229 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.

இதே ஓட்ட எண்ணிக்கையே இலங்கை தனது முதல் போட்டியிலும் பெற்றிருந்தது. எனினும், அப்போட்டியில் இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.