ரி20 உலகக்கிண்ணம்: முதல் போட்டியில் கறுப்புப் பட்டியுடன் களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

Bandula Warnapura
Bandula Warnapura

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி இன்று (18) தமது முதலாவது போட்டியில் விளையாடவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின்,டுபாயில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில்  இலங்கை அணி, நமீபியா அணியை எதிர்த்தாடவுள்ளது.

இன்று (18) காலை காலமான, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுரவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அவ்வாறே, இன்று (18) இடம்பெறும் இலங்கை – பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்களும் கறுப்புப் பட்டியணிந்து போட்டியில் பங்கேற்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் சுகயீனம் காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த பந்துல வர்ணபுர தமது 68 ஆவது வயதில் இன்று (18) காலமானார்.

கொழும்பு நாலந்தா கல்லூரியிலிருந்து அவர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவானார். 

இந்நிலையில், இலங்கை அணி சார்பில் முதல் டெஸ்ட் போட்டியில் முதலாவது பந்தை எதிர்கொண்டு முதல் டெஸ்ட் ஓட்டத்தைப் பெற்ற அணித்தலைவர் என்று அவரது பெயர் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.