அயர்லாந்து வீரர் கர்டிஸ் கெம்பர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!

ireland
ireland

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில், நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், அயர்லாந்து வீரர் கர்டிஸ் கெம்பர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டியொன்றில் ஹெட்ரிக் விக்கெட்டைப் பெற்ற முதலாவது அயர்லாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் தனதாக்கியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளரான ப்ரெட் லீ 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

அவருக்கு அடுத்தபடியாக இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டியொன்றில் நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 2 ஆவது வீரராக கர்டிஸ் கெம்பர் இடம்பிடித்துள்ளார்.

நெதர்லாந்து அணிக்கெதிரான இன்றைய போட்டியில் கெம்பர் தமது ஓவர்களில் 12 ஓட்டங்களைக் கொடுத்திருந்திருந்த போதிலும் விக்கெட் எதனையும் பெற்றிருக்கவில்லை. எனினும்,  சில நிமிடங்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

அவர் நெதர்லாந்து அணியின் கொலின் அக்கர்மான், ரயான் டெஸ்காட்டி, ஸ்கொட் எட்வர்ட் மற்றும் ரோல்வ் வென் டீ மெர்வ் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார்.

இதேவேளை, ஆடவர் இருபதுக்கு 20 (உலகக்கிண்ணம் அல்லா) போட்டிகளில் ராஷித் கான் (எதிர் அயர்லாந்து – 2019) மற்றும் லசித் மாலிங்க (எதிர் நியூஸிலாந்து – 2019) ஆகிய இருவரும் நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.