இக்கட்டான நிலையில் ஆப்கானை இன்று எதிர்கொள்ளும் இந்தியா!

SjRpltqT
SjRpltqT

2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் இந்தியா, தனது மூன்றாவது சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கின்றது.

இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு அபுதாபியில் அமைந்துள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி நடப்பு டி-20 உலகக் கிண்ணத்துக்கான பயணத்தை ஆரம்பித்தது.

அதன் பின்னர் நியூசிலாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதற்கிடையில் சூப்பர் 12 சுற்றில் தான் எதிர்கொண்ட மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று, குழு 2 இல் இரண்டாம் இடத்தை பிடித்து நல்ல நிலையில் உள்ள ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது இந்தியா.

மொஹமட் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஸ்கொட்லாந்துக்கு எதிரான வெற்றியுடன் தனது சூப்பர் 12 சுற்று ஆட்டங்களை தொடங்கியது, பின்னர் பாகிஸ்தானிடம் தோற்றது அதற்கு அடுத்து நமீபியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று மீண்டெழுந்தது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, இந்திய அணி துடுப்பாட்ட பிரச்சினைகள் மற்றும் பந்துவீச்சு சிக்கல்களை சரி செய்து முதல் வெற்றியை பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வீரர்களால் ஓட்டங்களைத்தான் எடுக்க முடியவில்லை என்றாலும், எதிரணியின் விக்கெட்டுகளை கைப்பற்றுவதிலும் அவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்களால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.

மறுபுறம், ஆப்கானிஸ்தான் தங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் நம்பி, இந்தியாவுக்கு எதிராக அதிர்ச்சிகரமான வெற்றியைப் பதிவு செய்யும் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்தியா கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

எவ்வாறாயினும் ஒரு வெற்றி மட்டும் நடப்பு டி-20 உலகக் கிண்ணத்தில் அவர்களின் தலைவிதியை மாற்றாது. ஏனைய ஆட்டங்களிலும் அவர்கள் பாரிய அளவில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.