மஹேலவின் ஆலோசனைகள் பெரிதும் உதவின – அணித் தலைவர் தசுன்

image 2021 11 05 163327
image 2021 11 05 163327

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால் சில சிரேஷ்ட வீரர்களையும் அணியில் இணைத்துக்கொள்வது அவசியம் என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை சுப்பர் 12 சுற்று போட்டியில் 20 ஓட்டங்களால் வெற்றிகொண்டு உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற்றிய பின்னர் வியாழக்கிழமை (4) இரவு நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியின் ஒட்டுமொத்த ஆற்றல்கள் குறித்து திருப்தி வெளியிட்ட தசுன் ஷானக்க, அணியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு, இளம் வீரர்களுக்கு உரிய ஆசோசனைகளை வழங்கி முன்னோக்கி நகரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இருபது 20 உலகக் கிண்ணப் போட்டிக்கான பூர்வாங்க குழாத்தில் இடம்பெறாமல் கடைசி நேரத்தில் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெத்தும் நிஸ்ஸன்க, முதலிரண்டு போட்டிகளில் விளையாடாமல் 3 ஆவது போட்டியிலிருந்து அணியில் சேர்க்கப்பட்ட சரித் அசலன்க ஆகிய இருவர் குறித்து பேசிய தசுன் ஷானக்க, அவர்கள் இருவருக்கும் மஹேல ஜயவர்தன வழங்கிய ஆலோசனைகள் சிறந்த பலாபலனைக் கொடுத்தது என்றார்.

‘நிஸ்ஸன்க, அசலன்க ஆகிய இருவரும் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் விளையாடினர். அவர்களிடம் திறமை உண்டு. அவர்கள் தங்களது பயிற்சிகளை நுட்பத்திறனுடன் செய்ததன் மூலம் அவர்கள் இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்தனர்.

மஹேல ஜயவர்தன போன்றவர்களின் ஆலோசனைகள் மூலம் அவர்களை இன்னும் திறமைசாலிகளாக ஆக்க முடியும். அவர்களுடன் வனிந்து ஹசரங்க தனது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்த மூவரினதும் விடாமுயற்சி பாராட்டுக்குரியது.

அதேவேளை, எதிர்காலத்தில் தொடர்ச்சியாக பிரகாசிப்பதற்கு அவர்கள் மூவருக்கும் நாங்கள் ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கவேண்டும்’ என தசுன் ஷானக்க மேலும் தெரிவித்தார்.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் நமிபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளையும் சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளையும் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

இந்த சுற்றுப் போட்டியில் சரித் அசலன்க 2 அரைச் சதங்களுடன் 231 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸன்க 3 அரைச் சதங்களுடன் 221 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ ஒரு அரைச் சதத்துடன் 155 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 16 விக்கெட்களைக் கைப்பற்றி ஒட்டுமொத்த நிலையில் முதலிடத்தில் உள்ளார்.

இது இவ்வாறிருக்க, இந்த சுற்றுப் போட்டியில் ஈட்டிய 5 வெற்றிகளுக்கும் சுப்பர் 12 சுற்றில் விளையாடிமைக்கும் இலங்கை அணிக்கு 5 கோடியே 48 இலட்சத்து 10,000 ரூபா மொத்த பணப்பரிசு கிடைக்கவுள்ளது.