பரபரப்பான இறுதிப் போட்டியில் சமபலம் பொருந்திய இரு அணிகள் !

AUS NEZ
AUS NEZ

இருபது 20 உலக கிண்ண கிரிக்கெட் 7ஆவது அத்தியாயத்தின் உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதலாவது சம்பியனான நியூஸிலாந்தும் ஐந்து தடவைகள் 50 ஓவர் கிரிக்கெட்டில் உலக சம்பியனான அவுஸ்திரேலியாவும் இருபது 20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக சம்பியனாகும் கங்கணத்துடன் இன்றைய இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

இந்த இறுதிப் போட்டி நியூஸிலாந்தின் பந்துவீச்சுக்கும் அவுஸ்திரேலியாவின் துடுப்பாடத்துக்கும் இடையிலான போட்டியாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இரண்டு அணிகளும் சகலதுறைகளிலும் சமபலம் கொண்டவையாகவே தென்படுகின்றன.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் உள்ள இங்கிலாந்தையும் பாகிஸ்தானையும் அரை இறுதிப் போட்டிககளில் முறையே நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் வெற்றிகொண்டிருந்தன.

இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியின் கடைசி கட்டத்தில் 23 பந்துகளில் 60 ஓட்டங்களைக் குவித்து நியூஸிலாந்தும், பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் 40 பந்துகளில் 81 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவும் வெற்றிகொண்டே இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

14 வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் சம்பியனானதில்லை. மேற்கிந்தியத் தீவுகளில் 2010 இல் நடைபெற்ற 3ஆவது அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. 

நியூஸிலாந்து இறுதிப் போட்டியில் விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும். ஆகையால், இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் புதிய அணி ஒன்று சம்பியனாவது உறுதியாகியுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் நேருக்கு நேர் மோதிய 14 சந்தர்ப்பங்களில் அவஸ்திரேலியா 9 – 4 என்ற ஆட்டங்கள் கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது. சமநிலையில் முடிவடைந்த மற்றைய போட்டியில் சுப்பர் ஓவரில் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

இருபது 20 உலகக் கிண்ண அரங்கில் இரண்டு அணிகளும் மோதிய ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் நியூஸிலாந்து வெற்றிபெற்றது. இந்தியாவில் 2016 இல் நடைபெற்ற அப் போட்டியில் நியூஸிலாந்து 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. (நியூஸிலாந்து 142 – 8 விக். அவுஸ்திரேலியா 134 – 9 விக்.)

இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடுபவர்களில் நியூஸிலாந்து அணியில் டெரில் மிச்செல் (197 ஓட்டங்கள்), மார்ட்டின் கப்டில் (180), கேன் வில்லியம்சன் (131), ட்ரென்ட் போல்ட் (11 விக்கெட்கள்), இஷ் சோதி (9), டிம் சௌதீ (8) ஆகியோர் முக்கிய வீரர்களாக இடம்பெறுவதுடன் இஷ் சோதி, க்ளென் பிலிப்ஸ், டிம் சீபேர்ட், லொக்கி பேர்குசன் ஆகிய சிறந்த வீரர்களும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னர் (236 ஓட்டங்கள்), ஆரொன் பின்ச் (130), மிச்செல் மார்ஷ் (108), அடம் ஸம்ப்பா (12 விக்கெட்கள்), மிச்செல் ஸ்டார்க் (9), ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோர் பிரதான வீரர்களாக இடம்பெறுவதுடன் ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், பெட் கமின்ஸ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

மேலும், 12 வருடங்களுக்கு முன்னர் மேற்கு அவுஸ்திரேலியாவில் ஸ்கார்பரோ அணியில் ஒன்றாக கல்வி பயின்றவர்களும் வீரர்களுமான டெரில் மிச்செல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் இன்று எதிரும் பதிருமாக விளையாடவுள்ளமை சுவாரஸ்யமான விடயமாகும்.

இந்த இரண்டு அணிகளினதும் வீரர்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாகவே தென்படுகின்றன.

இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்தி உலக சம்பியனாக முயற்சிப்பதால் இன்றைய இறுதிப் போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு அணிகளும் கடந்து வந்த பாதை

நியூஸிலாந்து

எதிர் பாகிஸ்தான் 5 விக்கெட்களால் தோல்வி

எதிர் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் ஸ்கொட்லாந்து 18 விக்கெட்களால் வெற்றி

எதிர் நமிபியா 53 ஓட்டங்களால் வெற்றி

எதிர் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்களால் வெற்றி

அரை இறுதி

எதிர் இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றி

அவுஸ்திரேலியா

எதிர் தென் ஆபிரிக்கா 5 விக்கெட்களால் வெற்றி

எதிர் இலங்கை 7 விக்கெட்களால் வெற்றி

எதிர் இங்கிலாந்து 8 விக்கெட்களால் தோல்வி

எதிர் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்களால் வெற்றி

அரை இறுதி

எதிர் பாகிஸ்தான் 5 விக்கெட்களால் வெற்றி