டெஸ்ட் போட்டியை பார்வையிட ஏன் அனுமதியில்லை – முஜிபுர் ரஹ்மான்

mujibur rahuman
mujibur rahuman

மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியே நடைபெற்றதாக குற்றம் சாட்டிய  ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், நாட்டில் ஏன் இரு சட்டங்கள் ? எனவும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் திங்கட்கிழமை (22) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில், இடம்பெற்ற வாய்மூல விடைக்கான  வினாவின் போது ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயிடம் கேள்வி எழுப்புகையிலேயே  இவ்வாறு குற்றம் சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டங்களுக்கு வந்தவர்கள் காவல்துறையினரால் திருப்பியனுப்பட்டனர். நாட்டின் தற்போதைய நிலையில் போராட்டங்களை நடத்தி மக்களை ஒன்று கூட செய்வதால் கொரோனா வைரஸ் பரவும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு இரு நாட்கள் முன்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் வெளியிடப்பட்டிருந்தது. 

இதில், விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியும். ஆனால், விளையாட்டுப் போட்டிகளை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் கொழும்பு குதிரை பந்தயத்திடலில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் 5,000  பார்வையாளர்கள்  கலந்துகொண்டிருந்தனர்.  

இதேவேளை காலியில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கான டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. 

நாட்டில் ஏன் இரு சட்டங்கள் ? ஒருவேளை இந்த போட்டிக்கும் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணம் என்று பெயர் வைத்திருந்தால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பார்களா? எனக் கேட்டார்.   

எனினும்  இந்த கேள்வி பொருத்தமற்றது எனக்  கூறி பதில் வழங்க இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மறுத்து விட்டார்.