2022 மகளிர் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் தகுதியை இலங்கை இழந்தது!

indian women cricket
indian women cricket

சிம்பாப்வேயில் நடைபெற்று வந்த மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டி கைவிடப்பட்டதை அடுத்து, நியூஸிலாந்தில் 2022 இல் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் தகுதியை இலங்கை இழந்துள்ளது.

சிம்பாப்வேயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான 9 நாடுகளுக்கு இடையிலான மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று, கொவிட் – 19 தொற்று நோய் காரணமாக பல ஆபிரிக்க நாடுகளிலும் சிம்பாப்வேயில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நேற்று சனிக்கிழமையுடன் (28) இரத்து செய்யப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான போட்டியும் பாகிஸ்தானுக்கும் சிம்பாவேக்கும் இடையிலான போட்டியும் நேற்றைய தினம் நடைபெற்றன.

ஆனால் இலங்கை அணியின் உதவியாளர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்கான நேர்மறை அறிக்கையைக் கொண்டிருந்ததால் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான நேற்றைய போட்டி கைவிடப்பட்டது.

நியூஸிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு கடைசி 3 தகுதிகாண் அணிகளைத் தீர்மானிக்கும் பொருட்டு 9 நாடுகளுக்கு இடையிலான மகளிர் தகுதிகாண் சுற்று சிம்பாவேயில் நடத்தப்பட்டு வந்தது.

இந்தத் தகுதிகாண் சுற்று இடையில் இரத்துச்செய்யப்பட்டதால் அணிகளுக்கான தரவரிசையில் 6, 7, 8 ஆம் இடங்களை வகிக்கும் முறையே பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் ஆகியன அடுத்த வருட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளதாக ஐசிசி அறிவித்தது.

ஏற்கனவே மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றிருந்த அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென் அபிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய காடுகளுடன் இந்த 3 நாடுகளும் இணைந்துகொள்ளும்.

இதேவேளை, ஐசிசி மகளிர் சம்பின்ஷிப்புக்கான 3 ஆவது சுழற்சி (2022 – 2025) பருவகாலத்துக்கான அணிகளின் எண்ணிக்கை 8இலிருந்து 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அமைய அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென் அபிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து ஆகிய 10 நாடுகள் இந்த சுழற்சி பருவகாலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.