தடைக்கு பின் மீண்டும் களமிறங்கும் குணதிலக்க, திக்வெல்ல, மெண்டிஸ்!

coltkn 12 03 fr 06170822073 11071503 02122021 MSS CMY
coltkn 12 03 fr 06170822073 11071503 02122021 MSS CMY

கொவிட்-19 வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடையை பெற்றிருந்த தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய மூவரும் லங்கா பிரீமியர் லீக் டி-20 போட்டிகள் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணத்தின் போது வெளியாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில் அப்போதைய இலங்கை அணியில் இடம்பெற்ற தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல, மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய மூவருக்கும் கொவிட்-19 வைரஸிற்கான உயிர்ப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த மூன்று வீரர்களையும் விசாரித்த குழு வழங்கியிருந்த இறுதி அறிக்கைக்கு அமைய தனுஷ்க குணதிலக்கவிற்கு இரண்டு வருட போட்டித்தடையும், நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு தலா ஒன்றரை வருட போட்டித்தடையும், மூவருக்கும் தலா 25,000 அமெரிக்க டொலர்கள் வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

எனினும் கடந்த ஜூன் தொடக்கம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட இந்த வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் நிர்வாகம் ஆறு மாத காலம் உள்ளுர் போட்டிகளில் விளையாடுவதற்கான தடையினையும், ஒரு வருடத்திற்கான சர்வதேச போட்டித்தடையினையும் வழங்கியதோடு, இரண்டு வருடங்களுக்கான ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையுடன் ரூபா. 10 மில்லியனை அபாரதமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தது.

இது தவிர இந்த வீரர்கள் மூவரும் இலங்கை கிரிக்கெட் சபை பரிந்துரைக்கும் வைத்தியர் ஒருவரிடம் கட்டாயமான உளநல ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த வீரர்களுக்கான உளநல வைத்தியர் வழங்கிய பரிந்துரைக்கு அமைய இந்த வீரர்களுக்கான உள்ளுர் போட்டித்தடை கடந்த நவம்பர் மாதம் நீக்கப்பட்டிருந்தது. எனினும் தடை நீக்கப்பட்ட பின்னர் இந்த மூன்று வீரர்களும், தற்போது நிறைவடைந்த பிரதான கழக மட்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருக்கவில்லை.

ஆனால், இந்த வீரர்கள் மூவரும் இம்மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான போட்டிகள் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இந்த வீரர்களில் தனுஷ்க குணத்திலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் கோல் கிளேடியட்டர்ஸ் அணிக்காக ஆட, நிரோஷன் திக்வெல்ல தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிக்காக ஆடவுள்ளனர்.