கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் இறுக்கமான வெற்றியை பெற்றுக்கொண்டது.
இலங்கை சுழற் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் 9 ஆவது விக்கெட்டில் யசிரு றொட்ரிகோ மற்றும் மதீஷ பத்திரண ஆகியோரின் பிரிக்கப்படாத 19 ஓட்டங்கள் எனும் பெறுமதிமிக்க இணைப்பாட்டம் இலங்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியிருந்தன.
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஒருவர்கூட 20 ஓட்டங்களை எட்டவில்லை. அதிகப்பட்சமாக 19 ஓட்டங்களை ரெஹான் அஹமட் பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களையும், யசிரு றொட்ரிகோ, ரவீன் டி சில்வா, ட்ரெவின் மெத்தியூ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். வனூஜ சஹன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
115 ஓட்டங்களை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பெரும் சிரமத்தின் மத்தியிலேயே வெற்றி இலக்கை அடைந்தது. இதில் இலங்கை அணி 44 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 96 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையிலிருந்த இலங்கை அணிக்கு 9 விக்கெட்டுக்காக இணைந்த யசிரு (12) மற்றும் மதீஷ பத்திரண (06) நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அஞ்சுல பண்டார 29 ஓட்டங்களையும், அணித்தலைவர் துனித் வெல்லாலகே 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பில் தோமஸ் அஸ்பின்வோல் மற்றும் ரெஹான் அஹமட் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன், இவ்விருண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 4 ஆவது போட்டி எதிர்வரும் 8 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.