இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரின் ஆண்கள் பிரிவில் தேபேகம ரண்த்தரு விளையாட்டு கழகமும், பெண்கள் பிரிவில் கொஸ்வாடிய விஜய விளையாட்டுக் கழகமும் சம்பியனாகியிருந்தன.
மஹரகமவிலுள்ள இளைஞர் சேவைகள் உள்ளக அரங்கில் கடந்த ஞாயிறன்று இந்த இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கொஸ்வாடிய விஜய விளையாட்டுக் கழகத்தை கலிகமுவ ஹைட்ராமணி விளையாட்டுக் கழகம் எதிர்த்தாடியிருந்தது.
இதன் முதல் செட்டை 25 க்கு 18 என்ற கணக்கில் கலிகமுவ ஹைட்ராமணி கழகம் இலகுவாக கைப்பற்றியது. எனினும், இரண்டாவது செட்டில் சுதாரித்துக்கொண்டு விளையாடிய கொஸ்வாடி விஜய கழகம் 25க்கு 13 என்ற கணக்கில் மிகவும் இலகுவாக வென்றது.
இதையடுத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 3 ஆவது செட்டில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்ற வண்ணமிருக்கவே, போட்டி மிகவும் சூடுபிடித்தது.
இவ்வாறு 3 ஆவது செட்டில் 25க்கு 24 என்ற கணக்கில் இறுக்கமான வெற்றியை கொஸ்வாடிய அணி ஈட்டியது. இதனையடுத்து நடைபெற்ற தீர்மானமிக்க செட்டையும் 25க்கு 20 என்ற கணக்கில் கொஸ்வாடிய அணி தன்வசப்படுத்திய கொஸ்வாடிய அணிக்கு 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை வென்றது.
இதேவேளை, பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் நாத்தண்டிய யுனைட்டெட் விளையாட்டுக் கழகம் மற்றும் தேபேகம ரண்த்தரு விளையாட்டு கழகங்கள் மோதிக்கொண்டன.
இப்போட்டியின் முதல் செட்டை நாத்தண்டிய யுனைட்டெட் அணி 25க்கு 14 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை வென்றது. எனினும், 2 ஆவது மற்றும் 3 ஆவது செட்களிலும் 25 க்கு 23, 25 க்கு 16 என்ற புள்ளிகள் கணக்கில் அடுத்தடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றது.
இதையடுத்து மிகவும் இறுக்கமாக அமைந்த 4 ஆவது செட்டில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றன. 4 ஆவது செட்டை கைப்பற்றுவதற்கு நாத்தாண்டிய யுனைட்டெட் அணி முயன்ற போதிலும் அது கைக்கூடாமல் போகவே, அந்த செட்டையும் 28 க்கு 26 என்ற கணக்கில் ரண்த்தரு அணி வென்றது.
இதன்படி 3 க்கு 1 என்ற செட் கணக்கில் தேபேகம ரண்த்தரு விளையாட்டு கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.