இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஏஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமானது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களை எடுத்து தடுமாற்றத்துடன் காணப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து, ஒல்லி போப் – ஜோஸ் பட்லர் ஜோடி ஓட்டங்களை குவித்தது.
இந்நிலையில், பட்லர் 39 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து போப் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களும், ஒல்லி போப் 35 ஓட்டங்களும், ஹசீப் ஹமீட் 25 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவர் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட தயாராகிவரும் நிலையில், சீரற்ற காலநிலையினால் போட்டியை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.