ரக்பியில் மேல் மாகாண ஏ பிரிவில் சென்.பீற்றர் கல்லூரி அணி சம்பியன்!

thumb mangala 1
thumb mangala 1

இலங்கை பாடசாலை ரக்பி சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த பாடசாலை அணிகளுக்கிடையிலான அணிக்கு ஏழு பேர் பங்கேற்றிருந்த மேல் மாகாண ‘ஏ ‘ பிரிவுக்கான ‘ரக்பி செவன்ஸ்’ போட்டித் தொடரில் பம்பலப்பிட்டி சென். பீற்றர்ஸ் அணி சம்பியனானது.

கல்கிஸ்சை சென்.தோமஸ் அணிக்கெதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் அணி 19க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் இறுக்கமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக நடைபெறாமல் இருந்து வந்த பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் 600 நாட்களுக்குப் பின்னர், மீண்டும் கடந்த வெள்ளியன்று (18) ஆரம்பிக்கப்பட்டது. 50 பாடசாலை ரக்பி அணிகள் பங்கேற்கும் பாடசாலை ரக்பி செவன்ஸ் போட்டியானது 5 மாகாணங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேல் மாகாண பாடசாலை அணிகள் பங்கேற்கும் போட்டிகள் ரக்பி செவன்ஸில் பாடசாலை அணிகளின் தரவரிசைகளுக்கு ஏற்ப ஏ மற்றும் பீ என பிரிக்கப்பட்டிருந்தது. இதில் 18 ஆம் திகதியன்று பீ பிரிவு போட்டிகளும், 19 ஆம் திகதியன்று ஏ பிரிவு போட்டிகளும் கொழும்பு ரோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்றிருந்தன.

மேல் மாகாண ஏ பிரிவில், ரோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி,வெஸ்லி கல்லூரி,தேர்ஸ்டன் கல்லூரி, சென்.ஜோசப் கல்லூரி, டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, சென்.பீற்றர்ஸ் கல்லூரி, மொறட்டுவை பிரின்ஸ் ஒப்‍ வேல்ஸ் கல்லூரி, மருதானை சாஹிரா கல்லூரி, கல்கிஸ்சை சென் தோமஸ் கல்லூரி, இசிப்பத்தன கல்லூரி, விஞ்ஞானக் கல்லூரி ஆகியன இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற மேல் மாகாண ஏ பிரிவு சம்பியனாக சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணி சம்பியனானதுடன், கல்கிஸ்சை சென்.தோமஸ் கல்லூரி அணி உப சம்பியனானது.

மேல் மாகாண ஏ பிரிவின் பிளேற் பிரிவில் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி அணியும் (21க்கு5) , வவுள் பிரிவில் வெஸ்லி கல்லூரி அணியும் (19க்கு7), செல்ட் பிரிவில் இஸிப்பத்தன அணியும் (36க்கு0) சம்பியனாயிருந்தன.

மேல் மாகாண பீ பிரிவில் பிலியந்தல மத்திய கல்லூரி அணி சம்பியன்

மஹாநாம கல்லூரி,கன்னங்கரா கல்லூரி, பிரியரத்ன கல்லூரி, பாணந்துறை சுமங்கல கல்லூரி, பிலியந்தலை மத்திய கல்லூரி, நாலந்தா கல்லூரி, சென்.பெனடிக்ட் கல்லூரி, சென்.ஜோன் கல்லூரி, கேரி கல்லூரி, மொறட்டு கல்லூரி ஆகியன மேல் மாகாண பீ பிரிவில் பங்கேற்றிருந்தன.

கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற மேல் மாகாண பீ பிரிவுக்கான போட்டித் தொடரின் கிண்ணத்துக்கான பிரிவில் பிலியந்தல மத்திய கல்லூரி அணி சம்பியானகியிருந்தமை விசேட அம்சமாகும். மேல் மாகாண பீ பிரிவின் பிளேற் பிரிவில் சென்.பெனடிக்ட் கல்லூரி அணியும் (21க்கு5) , வவுள் பிரிவில் மஹாநாம கல்லூரி அணியும் (19க்கு7), செல்ட் பிரிவில் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா கல்லூரி அணியும் (36க்கு0) சம்பியனாகியிருந்தன.