19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்: இலங்கைக்கு அமோக வெற்றி!

FHSrKe7XEAY4egh
FHSrKe7XEAY4egh

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று ஆரம்பமான 19 வயதுக்குட்டவர்களுக்கான ஆசிய கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை தனது முதலாவது ஆட்டத்தில் குவைத்தை 274 ஓட்டங்களால் அமோக வெற்றிகொண்டது.

8 நாடுகள் பங்குபற்றும் இந்த சுற்றுப் போட்டியில் பி குழுவில் இலங்கை, குவைத், பங்களாதேஷ், நேபாளம் ஆகியனவும் ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியனவும் பங்குபற்றுகின்றன.

குவைத்துக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 323 ஓட்டங்களைக் குவித்தது.

சமிந்து விக்ரமசிங்க, ஷெவொன் டெனியல் ஆகிய இருவரும் தலா 54 ஓட்டங்களைப் பெற்றதுடன் 1 ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

3 ஆம் இலக்க வீரர் சதிஷ ராஜபக்ச 35 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த பவன் பத்திராஜா (86), ரனுது சோமரட்ன (60 ஆ.இ.) ஆகிய இருவரும் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை இளையோர் அணியைப் பலப்படுத்தினர்.

குவைத் பந்துவீச்சில் ஸீஷான் அஸீம் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹாபியர் அலி 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குவைத் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை பந்துவீச்சில் அணித் தலைவர் துனித் வெல்லாலகே 2 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சதிஷ ராஜபக்ச 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மதீஷ பத்திரண 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக பவன் பத்திராஜா தெரிவானார்.