ராகுலின் அபார சதத்தின் உதவியுடன் பலமான நிலையில் இந்தியா!

21 61c89041c5753
21 61c89041c5753

செஞ்சூரியன் சுப்பர்ஸ்போர்ட் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிறன்று ஆரம்பமான தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கே. எல். ராகுலின் ஆட்டமிழக்காத அபார சதத்தின் உதவியுடன் இந்தியா பலமான நிலையை நோக்கி நகர்ந்துள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா அதன் முதலாவது இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 272 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் தொடர்ந்தும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி கணிசமான மொத்த எண்ணிக்கையைக் குவித்து தென் ஆபிரிக்காவில் தொடர் வெற்றியை ஈட்டுவதற்கு இந்தியா முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராகுல், மயான்க் அகர்வால் (60) ஆகிய இருவரும் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இந்நிலையில் அகர்வால், சேத்தேஷ்வர் புஜாரா (0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் லுங்கி நிகிடி ஆட்டமிழக்கச் செய்ய இந்தியா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் ராகுலுடன் இணைந்த விராத் கோஹ்லி 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டையும் நிகிடியே கைப்பற்றினார்.

அதன் பின்னர் ராகுல், அஜின்கியா ரஹானே ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.

ராகுல் 122 ஓட்டங்களுடனும் ரஹானே 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். தனது 41ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ராகுல் 7ஆவது சதத்தைப் பூர்த்திசெய்துள்ளார்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் லுங்கி நிகிடி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.