பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா

1641172390 football 2
1641172390 football 2

ஆா்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெஸ்ஸியுடன் சேர்ந்து பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பிரெஞ்சுக் கிண்ணத்தை இந்த அணி விளையாட இருந்த நிலையில், தற்போது அணியில் 4 வீரர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணியில் ஊழியர் ஒருவருக்கு முதலில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீரர்கள் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில் 7 முறை பேலோன் தோர் விருதை வென்ற பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, ஜூயன் பெர்னட், செர்ஜியோ ரிகோ மற்றும் 19 வயதான நேதன் பிடுமஸாலா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.