பாகிஸ்தான் செல்கிறது பங்களாதேஷ்!

60 601701 bangladesh cricket team hd wallpapers bangladesh cricket team
60 601701 bangladesh cricket team hd wallpapers bangladesh cricket team

பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, தற்போது அங்கு சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் மண்ணில் ரி-20 தொடரில் விளையாடுவதற்கு மட்டும் சம்மதம் தெரிவித்து, டெஸ்ட் தொடரை பொதுவான இடத்தில் நடத்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வேண்டுக்கோள் விடுத்தது.

இதனால் இந்த தொடரை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, தீர ஆலோசித்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இந்த ஒட்டுமொத்த தொடரையும் பாகிஸ்தான் மண்ணில் நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது.
பங்களாதேஷ் அணி எப்படியும் பாகிஸ்தான் வரும் என்று நம்பியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, ஒரு போட்டியை பகல்-இரவு டெஸ்டாக நடத்த விரும்பியது. இதற்கு சம்மதிக்கும்படி பங்களாதேஷிற்கு வேண்டுகோளும் விடுத்தது.

எனினும், பாதுகாப்பு காரணத்திற்காக பங்களாதேஷ் அணி, இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இடைவெளிவிட்டு விளையாடுகிறது.

இதன்படி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் செல்லவுள்ள பங்களாதேஷ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றது.

எனினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும் ஏப்ரல் மாதம் விளையாடுகின்றது.
இந்த நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, முதலாவதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 24ஆம் திகதி லாகூர் மைதானத்தில் நடைபெறுகின்றது.

இரண்டாவது ரி-20 போட்டி 25ஆம் திகதியும், மூன்றாவது ரி-20 போட்டி 27ஆம் திகதியும், லாகூர் மைதானத்தில் நடைபெறுகின்றன.
முதலாவது டெஸ்ட் போட்டி, பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்பிறகு ஒரேயொரு ஒருநாள் போட்டி, ஏப்ரல் மாதம் 3ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியும் கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தங்கள் மண்ணில் விளையாடுவதை எண்ணி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதனால், பாகிஸ்தானிற்கு சென்று விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டின. ஆனாலும் பாகிஸ்தான் சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.