வெற்றிகளை அதிகரிக்க விளையாட்டுத்துறை பல்கலைக்கழகம் அமைப்பு – பிரதமர்

sports university
sports university

இலங்கை வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் வெற்றிகளை அதிகரிக்கும் வகையில் சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமையை தேடிக் கொடுத்த வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு 14ம் திகதி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இதில் விளையாட்டுத்துறை நிதியத்தில் இருந்து தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,

“இலங்கையில் அதிகளவு சர்வதேசப் போட்டிகளை நடாத்துவதற்கு திட்டங்களை வகுத்து விளையாட்டுத்துறைக்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுக்கின்ற வீரர்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது அவசியமாகும்.

எதிர்காலத்தில் இந்த நாட்டின் விளையாட்டுத்துறை செழிப்பாக இருக்க வேண்டுமாயின் நாங்கள் அந்த வீரர்களை பாதுகாக்க வேண்டும். இந்த விடயத்தில் எமது அரசாங்கம் நிச்சயம் அவதானம் செலுத்தும்” என தெரிவித்தார்.