நியூசிலாந்து அபார வெற்றி!

skysports new zealand cricket 4716477
skysports new zealand cricket 4716477

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 06 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹமில்டனில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சற்று அதிரடியாக ஆடினர். ஆனால் மிகப்பெரிய அளவில் அவர்களால் ஓட்டங்களைக் குவிக்கமுடியவில்லை.

சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 107 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொருபுறம் அதிரடியாக விளையாடிய ராகுல் 64 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 88 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 347 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு 348 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் குப்டில், நிகோலஸ் ஆகியோர் வலுவான அடித்தளத்தை அமைத்தனர். நடுவரிசையில் வந்த ரோஸ் டெய்லர் மற்றும் ரொம் லாதம் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

இறுதியில் சாட்னர், சிக்ஸரையும் பவுண்டரியையும் பறக்கவிட நியூசிலாந்து அணி 11 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது.

ரோஸ் டெய்லர் தனது 20 ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்து, 109 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார்.

நிகோலஸ் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். உலகின் முதன் நிலைப்பந்துவீச்சாளர்களான பும்ரா, சமி போன்றவர்களாலும் இறுதியில் நியூசிலாந்தின் வெற்றியைத் தடுக்க முடியாது போனது.