மட்டு சிவானந்தா கழகம் வெற்றி

sivananda
sivananda

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் A பிரிவுக் கழகங்களின் இறுதிப் போட்டிகள் இன்று (22.09.2019) சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன. இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகமும் ஏறாவூர் இளம் தாரகை விளையாட்டுக் கழகமும் (YSSC) தெரிவாகி பலப்பரீட்சை நடத்தின.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் இளம் தாரகை அணியினர் 50 ஓவர் முடிவில் 173 ஓட்டங்களை குவித்தனர்.பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிவானந்தா விளையாட்டுக் கழகத்தினர் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

இப்போட்டியானது 5 மாத காலமாக கட்டம் கட்டமாக இடம்பெற்று வந்துள்ளது. மேலும் இதில் தெரிவாகிய அணியானது மாகாண மட்ட சுற்றுப்போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளது. இப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஏறாவூர் இளம் தாரகை அணியின் ஷம்கான் அவர்களும் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறப்பாட்டக்காரராக K.சாத்வீகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கௌரவ தி.சரவணபவன் அவர்கள் கலந்துகொண்டதுடன் கிரிக்கெட் சங்கத் தலைவர் பொறியியலாளர் N.B. ரஞ்சன், செயலாளர் V.பிரதீபன், உபசெயலாளர் G.முரளிதரன், பொருளாளர் S.சண்முககேசகர், இறுதிப் போட்டிக்குழுத் தலைவர் A.அருள்பிரகாசம் மற்றும் போட்டி ஒழுங்கமைப்புக் குழு உறுப்பினர் M.P.M றிசாத் ஆகியோரும் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.