யாருடனும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடத் தயார்- குணதிலக தெரிவிப்பு

kunathilaka 2
kunathilaka 2

உபாதைக்குப் பிறகு இலங்கை அணியில் இடம்பிடித்து சதமடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க, தான் யாருடனும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடத் தயாராக இருப்பதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 133 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை ஒருநாள் அணியில் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இடம்பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க தனது 2ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்திருந்ததுடன் பாகிஸ்தான் மண்ணில் அதிகபட்ச ஒருநாள் ஓட்டங்களைக் (133) குவித்த வீரராகவும் இடம்பிடித்தார்.

இதேநேரம், இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடித்து சதமடிக்க கிடைத்தமை தொடர்பில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தனுஷ்க குணலதிக்க,

“உபாதை காரணமாக எனக்கு இலங்கை அணியில் அண்மைக்காலமாக இடம்பெற முடியாமல் போனது. எனவே சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நான் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடினேன். இந்த வாய்ப்பு எனக்கு மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமைந்ததுடன் அதை நான் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டேன்.

நான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரின் போது உபாதைக்குள்ளாகினேன். அதன்பிறகு சுமார் 5 மாதங்கள் என்னால் விளையாட முடியாமல் போனது. அதேபோல கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் துடுப்பாட்ட பயிற்சிகளையும் ஆரம்பித்தேன் என தெரிவித்தார்.

அதேபோல இலங்கை அணிக்காக 3 வகை போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளேன். தேர்வாளர்களின் கைகளில் தான் அது தங்கியுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அணியில் எந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரருடன் விளையாடுவதற்கு இலகுவாக இருக்கின்றது என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

என்னால் அவ்வாறு ஒரு வீரரை மாத்திரம் பெயரிட்டு கூறமுடியாது. எனினும், எந்த வீரருடன் நான் களமிறங்கினாலும் ஓட்டங்களைக் குவிப்பதற்கு தான் எதிர்பார்ப்பேன். நான் திலகரத்ன டில்ஷானுடனும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியுள்ளேன். அந்த அனுபவமும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

இதேவேளை T20 போட்டிக்கு மிகவும் சிறந்த அணியொன்று எம்மிடம் உள்ளது. T20 போட்டிகளுக்கென்றே சிறந்து விளங்குகின்ற ஒருசில முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனவே பாகிஸ்தான் அணிக்கு சிறந்த போட்டியொன்றைக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.