சொந்த மண்ணில் இந்திய அணி அபார வெற்றி

two captains
two captains

இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் சுதந்திரக்கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 203 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கட்டுக்களை இழந்து 502 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக மயாங் அகர்வால் 215 ஓட்டங்களையும் ரோகித் ஷர்மா 176 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். தென்னாபிரிக்க அணி சார்பாக கேஷவ் மஹாராஜ் 189 ஒட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி தனது முதலாவது இன்னிங்சில் 431 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. டீன் எல்ஹர் 160 ஓட்டங்களையும் குயின்டன் டீகொக் 111 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இந்திய அணி சார்பாக அஸ்வின் 145 ஒட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 04 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 323 ஓட்டங்களை பெற்று தனது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. ரோகித் ஷர்மா 127 ஓட்டங்களையும் புஜாரா 81 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். தென்னாபிரிக்க அணி சார்பாக கேஷவ் மஹாராஜ் 129 ஒட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

395 ஒட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 191 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. தென்னாபிரிக்க அணி சார்பில் டேன் பீட் 56 ஓட்டங்களையும் செனூரன் முத்துசாமி ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் சமி 35 ஒட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களையும் ரவி ஜடேஜா 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

தொடரின் இரண்டாவது போட்டி 10ம் திகதி புனேவில் நடைபெறவுள்ளது.