2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி

virat kohli
virat kohli

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 137 ஓட்டங்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக முறை டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையை இந்தியா அடைந்தது. இது இந்தியாவுக்கு சொந்த மண்ணில் தொடர்ந்து கிடைத்த 11வது வெற்றி ஆகும். 2012 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. மயாங் அகர்வாலின் சதம் மற்றும் இந்திய அணித்தலைவர் விராட் கோலியின் ஏழாவது இரட்டைச் சதத்துடன் இந்தியா ஐந்து விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டினையும் செனூரன் முத்துசாமியும், கேஷவ் மஹராஜும் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா தனது முதலாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேஷவ் மஹராஜ் 72 ஓட்டங்களையும் கேப்டன் டூ ப்ளசிஸ் 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், முஹமது ஷமி 2 விக்கெட்டுக்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தனது முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 326 ரன்கள் பின்தங்கியிருந்த தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ஈல்கர் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளையும் அஷ்வின் இரண்டு விக்கெட்டினையும் ஷமி மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

137 ஓட்டங்கள் மற்றும் ஓரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

போட்டியின் சிறந்த ஆட்டநாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் 19ம் திகதி ரஞ்சியில் நடைபெறவுள்ளது.