மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

pak 720x450 1
pak 720x450 1

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி, வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த நிலையில், 1 க்கு 0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.

சதம்டனில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியிருந்த இங்கிலாந்து அணி, 8 விக்கட்டுக்களை இழந்து 583 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 273 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர் பலோவன் முறையில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நேற்றைய இறுதி நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

நேற்றைய போட்டியில், பாகிஸ்தான் அணித் தலைவர் அஸார் அலியின் விக்கட்டை வீழ்த்தியதன் மூலம், 600 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழத்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அன்டர்சன் நிகழ்த்தினார்.

அத்துடன், டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கட்டுக்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் நான்காவது பந்துவீச்சாளராகவும் இணைந்துகொண்டார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன், இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் அனில் கும்ளே ஆகியோர் 600 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.