வவுனியா உதைபந்தாட்ட சங்கம் பதிவு செய்ய மறுக்கிறது என்கிறது- தாயகம் விளையாட்டு கழகம்

but record football 611x306 1 720x450 1
but record football 611x306 1 720x450 1

வவுனியா உதைபந்தாட்ட சங்கம் தாயகம் உதைபந்தாட்ட கழகத்தினை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதாக தாயகம் விளையாட்டு கழகத்தினர் தெரிவித்துள்ள நிலையில் மோசடியான முறையில் ஏமாற்றும் விதமாக செயற்படும் கழகங்களை தாம் பதிவு செய்து கொள்ள முடியாது என வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தாயகம் உதைபந்தாட்ட கழகம் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா உதைபந்தாட்ட கழகத்தில் கழகங்களை பதிவு செய்வதற்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இறுதி திகதி இடப்பட்டு எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. உதைபந்தாட்ட கழகத்தினால் 20 ஆம் திகதி என திகதி இடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதம் எமக்கு 24 ஆம் திகதி கிடைக்கப்பெற்றிருந்தது.

எனினும் பதிவு செய்வதற்காக 14 நாள் தவணையில் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எம்மை பதிவு செய்யவிடாத வகையில் குறித்த கடிதம் காலதாமதமாக அனுப்பப்பட்டிருந்த நிலையில் நாம் மேன்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் 30 ஆம் திகதிக்கு பின்னர் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் இருந்து தாயகம் உதைபந்தாட்ட கழகம் வெளியேற்றப்பட்டதாக அறிகின்றோம்.

வவுனியா மாவட்டத்தில் மிக இளவயதினரை கொண்ட அணியாக நாம் காணப்படுகின்றோம். நாம் நடத்துகின்ற திறந்த போட்டிகளில் ஏனைய கழகங்களை பங்குபற்ற கூடாது என வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சிடம் முறையிடவுள்ளோம் எனதெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் அ. நாகராஜனிடம் கேட்டபோது,

குறித்த கழகம் நாம்தெரிவித்த காலப்பகுதிக்குள் தமது பதிவுகளை மேற்கொள்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்திருக்கவில்லை. சங்கம் என்ற ரீதியல் நாம் எமது யாப்பு விதிகளின் பிரகாரமே செயற்பட முடியும். ஒவ்வொரு கழகத்திற்கும் ஒவ்வொரு நெகிழ்வுப்போக்கை கையாள முடியாது.

தாயகம் கழகம் கடந்த மாதம் 30 ஆம் திகதி தமது விண்ணப்ப படிவத்தினை பதிவு தபாலில் அனுப்பியதாக தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமைகளில் தாபால் நிலையம் திறந்துள்ளதாக அவர்கள் போலியாக தெரிவித்து எமது சங்கத்தினையும் தபால் திணைக்கத்தினையும் தவறாகவும் மோசடியாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

இதற்குமப்பால் வவுனியாவில் 21கழகங்கள் எவ்வித முரண்பாடுகளும் இன்றி பதிவு செய்துள்ள நிலையில் அவர்கள் மாத்திரம் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

பணம் உழைப்பதற்காக சில வேலைத்திட்டத்தினை உதைபந்தாட்டத்தினை வைத்து செயற்படுத்துகின்றார். இதற்கு புலம்பெயர் அமைப்புக்களை பயன்படுத்திக்கொள்கின்றார்.

குறித்த கழகத்தினை பதிவு செய்யுமாறு எனக்கு அழுத்தங்கள் சிலரால் விடப்பட்டாலும் கூட எமது சங்கத்தின் யாப்பை மீறி எதனையும் செய்ய முடியாது.

இக்கழகத்தினால் சுற்றுப்போட்டி நடத்துவதாக இருந்தால் அவர்கள் முறையாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விதிகளுக்கும் வவுனியா உதைபந்தாட்ட சங்க விதிகளுக்கும் உட்பட்டு அனுமதி கோரும் பட்சத்தில் அதற்கு எமது நிர்வாகம் கூடி சரியான அனுமதியை கொடுத்திருப்போம்.

தற்போதும் கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். எனினும் அவர்கள் எமது சங்கத்தில் அனுமதி கோரி கடிதம் எதனையும் சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் குறித்த கழகம் எமது சங்கத்தால் நடத்தப்படும் எந்த சுற்றுப்போட்டிகளிலும் பங்கேற்பதில்லை.

ஒரு கழகம் செயற்பாட்டு ரீதியில் உள்ளது என்பதனை சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதனை வைத்தே தீர்மானிக்க முடியும். எனவே எமக்கு எந்த கழகங்கள் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ இல்லை. எமது சங்கத்தின் கட்டமைப்பு மற்றும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் கட்டுப்பாடுகள் யாப்புகளுக்கு உட்பட்டே செயற்பட்டமுடியும். அதன் பிரகாரமே எமது நிர்வாகத்தினை எந்தவித இடர்பாடுகளும் இன்றி சிறப்பாக கொண்டு செல்ல முடிகின்றது என தெரிவித்தார்.