சென்னையை தெறிக்க விட்டது ராஜஸ்தான்!

1 27 1
1 27 1

சாம்ஸன், கப்டன் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் 16 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்.

ஐ.பி.எல். தொடரின் முதல் சுற்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னையின் கப்டன் டோனி, முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.

ஜெய்ஸ்வாலும் கப்டன் ஸ்மித்தும் ராஜஸ்தான் அணிக்குத் தொடக்கம் கொடுத்தனர். ஜெய்ஸ்வால் ஒரு பௌண்டரியை விளாசி 6 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் சாகல் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஸ்மித்துடன் இணை சேர்ந்தார் சாம்ஸன். இருவரும் இணைந்து சென்னையின் பந்து வீச்சுக்களை தெறிக்க விட்டனர். இந்த ஜோடி, 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.

32 பந்துகளை சந்தித்த சாம்சன் 9 சிக்ஸர், ஒரு பௌண்டரியை விளாசி அதிரடியாக 74 ஓட்டங்களைக் குவித்தார்.

ஸ்மித்துடன் இணைந்த டேவிட் மில்லர், எந்தப் பந்தையும் சந்திக்காமலே ரன் அவுட் முறையில் வெளியேறினார். உத்தப்பா 5, தெவடியா 10, பிராக் 6 என்று வேகமாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

மறுமுனையில் போராடிக் கொண்டிருந்த ஸ்மித் குர்ரனின் பந்தில் ஜாதவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பௌண்டரி அடங்கலாக 69 ஓட்டங்களை குவித்திருந்தார்.

20 ஓவர்கள் நிறைவில், ராஜஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 216 ஓட்டங்களைக் குவித்தது.

சென்னையின் பந்துவீச்சில் குர்ரன் 3 விக்கெட்களையும் சாகர், நிகிடி, சாவ்லா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

217 என்ற மிகப்பெரும் இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடியது சென்னை அணி. முரளி விஜயும், ஷேன் வற்சனும் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தபோதும் நிதானமாகவே ஓட்டங்களை சேர்த்தனர். 21 பந்துகளில் 33 ஓட்டங்களை எடுத்த வற்சன் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 21 பந்துகளில் 21 ஓட்டங்களை எடுத்த முரளி விஜயும் ஆட்டமிழந்து சென்றார்.

வற்சனின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து வந்த டூ பிளசிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். ஆனால் மறுபுறத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தன. குர்ரன் 6 பந்துகளில் 17 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார், கைக்வாட் ஓட்டம் எதனையும் பெறாமல் வெளியேறினார். ஜாதவ் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் விக்கெட் காப்பாளர் சாம்ஸனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

டூ பிளசிஸூடன் இணைந்த டோனி நிதானம் காட்டவே, பிளசிஸ் அதிரடி காட்டினார்.

டூ பிளசிஸூம் டோனியும் களத்தில் இருந்ததபோது சென்னை இலக்கை இலகுவாக அடைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் பிளசிஸ், ஆர்ச்சரின் பந்தில் ‘ரிப்’ ஆகி வெளியேறினார். அவர் 7 சிக்ஸர், ஒரு பௌண்டரியுடன் 72 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய டோனி இறுதி 3 பந்துகளிலும் சிக்ஸர் விளாசி அதிரடி காட்டினார். ஆனாலும், அது அணிக்கு வெற்றியைத் தரப் போதுமானதாக இல்லை என்பது முன்னரே அனைவருக்கும் தெரிந்திருந்தது.

இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில், சென்னை அணி 6 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. டோனி 29 ஓட்டங்களையும், ஜடேஜா ஒரு ஓட்டத்தையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

ராஜஸ்தானின் பந்து வீச்சில் தெவடியா 3 விக்கெட்களையும், ஆர்ச்சர், கோபால், குர்ரன் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக சஞ்சு சாம்ஸன் தெரிவானார்.