தோனியை நானே ஆட்டமிழக்கச் செய்தேன்-வருண் சக்ரவர்த்தி

x1080
x1080

சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனிக்கு எதிராக பந்து வீசி அவரை ‘க்ளீன் போல்ட்’ ஆக்கியமை நம்பமுடியாத தருணம் என, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் சுனில் நரைன், ரஷித் கான் ஆகியோர் அதிசயமான பந்து வீச்சாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் வருண் சக்ரவர்த்தியும் இணைந்துள்ளார்.

கொல்கட்டா அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி சென்னைக்கு எதிரான போட்டியின் முக்கியமான கட்டத்தில் 11 ஓட்டங்கள் பெற்றிருந்த தோனியை ‘க்ளீன் போல்ட்’ ஆக்கினார்.

4 ஓவர்களில் 28 ஓட்டங்கள் மாத்திரம் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதுகுறித்து வருண் சக்ரவர்த்தி கூறுகையில்,

‘‘3 ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்று அரங்கில் அமர்ந்து தோனியின் ஆட்டத்தை ஒரு ரசிகனாக கூட்டத்துக்கு நடுவிலிருந்து பார்த்து ரசித்தேன்.

தற்போது தோனி துடுப்பெடுத்தாடுவதை பார்க்கிறேன். அவருக்கு நான் பந்து வீசியதுடன், அவரை நானே ஆட்டமிழக்கச் செய்தேன். இது எனக்கு நம்பமுடியாத வகையிலான தருணம்.

இது 180 ஓட்டங்கள் அடிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கும் என்று நினைத்தேன். தோனி சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். பந்தை சரியான இடத்தில் ‘பிட்ச்’ செய்தால் விக்கெட் வீழ்த்த முடியும் என்று நினைத்தேன்.

திட்டத்தை சரியாக செயற்படுத்தினேன். போட்டி முடிந்த பின்னர் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்’’ என்றார்.