நடாலின் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் சாதனையை உலகில் யாராலும் முறியடிக்க முடியாது!

201806082249101919 Rafael Nadal beats Juan Martn del Potro by 64 61 62 to SECVPF
201806082249101919 Rafael Nadal beats Juan Martn del Potro by 64 61 62 to SECVPF

ரபேல் நடாலின் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் சாதனையை உலகில் யாராலும் முறியடிக்க முடியாது என்று முன்னாள் முதல் நிலை வீரரும், ஒலிம்பிக் சம்பியனுமான அன்டி மறே தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ‘கிராண்ட் ஸ்லாம்’ அந்தஸ்துடைய பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால், முதல் நிலை வீரரான சேர்பியாவின் ஜோகோவிச்சை தோற்கடித்து 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரின் சாதனையையும் (20 கிராண்ட் ஸ்லாம்) நடால் சமப்படுத்தினார்.

இந்நிலையில் அவரது சாதனை குறித்து முன்னாள் முதல் நிலை வீரரும், ஒலிம்பிக் சம்பியனுமான அன்டி மறே (இங்கிலாந்து) அளித்த பேட்டியில், ‘நடாலின் பிரெஞ்ச் பகிரங்க சாதனையை உலகில் யாராலும் முறியடிக்க முடியாது என்று கருதுகிறேன். விளையாட்டு உலகில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்க ஜாம்பவான் பீட் சாம்ப்ராஸ் ஒட்டுமொத்தத்தில் (4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டியை சேர்த்து) 14 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஆனால் நடாலோ ஒரே கிராண்ட் ஸ்லாம் (பிரெஞ்ச்) சம்பியன்ஷிப் போட்டியிலேயே அவரை விட இன்னும் ஒன்று தான் பின்தங்கியுள்ளார். உண்மையிலேயே இது நம்ப முடியாத ஒன்று. நடாலின் சாதனையை யாராலும் நெருங்கக் கூட முடியாது. நடாலும், ஜோகோவிச்சும் தொடர்ந்து உடற்தகுதியுடன் இருந்து ஒரே வயதில் ஓய்வு பெற்றால் அதிக கிராண்ட் ஸ்லாம் வெல்வதில் அவர்களிடையே தான் போட்டி இருக்கும்’ என்றார்.

சர்வதேச களத்தில் 34 வயதான நடாலுக்கு போட்டியாக உள்ள 39 வயதான பெடரர் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், 33 வயதான ஜோகோவிச் 17 கிராண்ட் ஸ்லாம் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, இவர்கள் இருவருமே பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் தலா ஒரு முறை மாத்திரமே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.