கெய்லின் தாண்டவத்தில் மீண்டது பஞ்சாப்!

202010140436487713 De Villiers is a superhuman Bangalore team captain Kohli SECVPF
202010140436487713 De Villiers is a superhuman Bangalore team captain Kohli SECVPF

கே.எல். ராகுல், கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டங்களால் தொடர் தோல்விக்குப் பின்னர், பெங்களூர் அணியை 8 விக்கெட்களால் வெற்றி கொண்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

இந்தியன் பிறிமியர் லீக்கின் 13ஆவது தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த 31 ஆவது போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ், கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கோலி முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கே வெற்றி வாய்ப்பு சாதகம் என்ற நம்பிக்கையில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.

அரோன் பின்ஞ், படிக்கல் இணை தொடக்கம் கொடுத்தது. படிக்கல் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கோலி அதிரடியாக ஆடினார். இந்நிலையில் பின்ஞ் 20 ஓட்டங்களுடன் அஸ்வினின் பந்தில் வெளியேறினார்.

அதன் பின்னர் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸை எதிர்பாரத்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார் கோலி. வில்லியர்ஸின் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் இறங்கினார். அவர் 13 ஓட்டங்களுடன் வெளியேறவே, அடுத்துக் களமிறங்கிய டப் 2 சிக்ஸர்களை விளாசி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆறாவது வீரராக களமிறங்கினார் ஏபி டி வில்லியர்ஸ்.  அவரால் 2 ஓட்டங்களையே பெற முடிந்தது. அவரைத் தொடர்ந்து 48 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் கோலியும் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களின் நிறைவில் பெங்களூர் அணி 6 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களையே பெற்றது. மொறிஸ் 8 பந்துகளை சந்தித்து ஒரு பௌண்ட்ரி 3 சிக்ஸர்களுடன் 25 ஓட்டங்களையும், உதான 10 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப்பின் பந்து வீச்சில் முஹமட் சமி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஆர்தீப் சிங், ஜோர்தன் ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

172 என்ற இலகுவான இலக்கைத் துரத்த ஆரம்பித்தது. கப்டன் கே. எல். ராகுல், அகர்வால் இணை களமிறங்கியது. இருவருமே அபாரமான ஆரம்பத் துடுப்பாட்டத்தை ஏற்படுத்தினர்.

25 பந்துகளை சந்தித்த அகர்வால் 4 பௌண்ட்ரிகள், 3 சிக்ஸர்களை விளாசி 45 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் களமிறங்கினார். கடந்த போட்டிகளில் அவர் பங்கேற்காமையால் சலிப்பில் இருந்த அவரின் ரசிகர்களுக்கு தனது வழக்கமான பாணியில் அதிரடியைக் காண்பித்தார் அவர்.

சிக்ஸர் மைதானம் என்று வர்ணிக்கப்படும் சார்ஜாவில் கெய்ல் வழக்கம் போன்று தனது தாண்டவ ஆட்டத்தை ஆடினார். அவருக்குத் துணையாக மறுமுனையில் தன் பங்குக்கு அதிரடி காட்டினார் கே.எல். ராகுல். 18 ஓவர்களில் 164 ஓட்டங்களை எட்டிய பஞ்சாப் அணிக்கு அடுத்த இரு ஓவர்களும் போக்குக் காட்டியது.

இரு அதிரடி வீரர்களும் தடுமாறினர். ஒற்றை ஓட்டங்களாக எடுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் 19.5 ஆவது ஓவரில் கெய்ல் ரன் அவுட் ஆனார். அப்போது பஞ்சாப் அணி 171 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  கெய்ல் ஒரு பௌண்ட்ரியுடன் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஒரு பந்தில் ஒரு ஓட்டம் என்ற நிலையில் புதிய வீரர் களமிறங்குவதால், வெற்றி, தோல்வியை சுப்பர் ஓவரே தீர்மானிக்கலாம் என்ற நிலை காணப்பட்டது. ஆனால், ஐ.பி.எல்லில் சிறந்த பினிஷர்களில் ஒருவராக உருவெடுத்த பூரன் களமிறங்கி அந்த ஒரே ஒரு பந்தில் சிக்ஸரைப் பறக்க விட்டார்.

இதனால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களிலேயே வெற்றியை ருசித்தது. அந்த அணி, 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 177 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பெங்களூரின் பந்து வீச்சில் சாகல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஒரு பௌண்ட்ரி, 5 சிக்ஸர்களை விளாசி 49 பந்துகளில் 61 ஓட்டங்களை எடுத்த கே.எல். ராகுல் தெரிவானார்.