கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!

RON 4606
RON 4606

நடப்பு ஆண்டுக்குரிய இந்தியன் பிரீமியர்லீக் போட்டியின் 49ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் பந்தில் வீழ்த்தி சென்னை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) இரவு 07.30 மணிக்கு டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்தது.

கொல்கத்தா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சுப்மான் கில் மற்றும் நிதிஸ் ராணா ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.

இதன்படி, நிதிஷ் ராணா 61 பந்துகளில் 04 ஆறு ஓட்டங்கள் மற்றும் 10 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், சுப்மன் கில் 26 ஓட்டங்களையும் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பாக, லுங்கி நெகிடி இரண்டு விக்கெட்டுகளையும், சான்ட்னர், ஜடேஜா மற்றும் கர்ன் ஷர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 173 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷேன் வொட்சன், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர்.

இதனால் சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரின் இறுதிப் பந்துவரை ஆடி, 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதன்படி சென்னை அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

ருத்ராஜ் கெயிக்வாட் 53 பந்துகளில் 02 ஆறு ஓட்டங்கள், 06 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன் ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் இறுதி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மேலும், அம்பதி ராயுடு 38 ஓட்டங்களையும், ஜடேஜா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பற் கம்மின்ஸ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெயிக்வாட் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, இம்முறை ஐ.பி.எல். தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் சென்னை அணி 13 போட்டிகளில் ஐந்தில் மாத்திரம் வெற்றிபெற்று, எட்டுப் போட்டிகளில் தோல்வியுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் இறுதி நிலையான எட்டாம் இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி, 13 போட்டிகளில் விளையாடி, ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று, ஏழு போட்டிகளில் தோல்வியுடன் 12 புள்ளிகளைக் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.