ஐ.சி. சி யின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறிய இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்!

Nuwan Zoysa
Nuwan Zoysa

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்றுவிப்பாளருமான நுவான் சொய்சா, ICCயின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ICCயின் மூன்று ஊழல் தடுப்பு விதிமுறைகளை அவர் மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ICCயின் ஊழல் தடுப்பு விதிமுறைகளின் அடிப்படையில் நுவான் சொய்சா மீது கடந்த 2018ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனை அடுத்து தீர்ப்பாயத்தின் விசாரணைகளின் போது அவர் முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவான் சொய்சா தொடர்ந்தும் விளையாட்டு நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான தடை குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, T10 லீக் தொடரில் பங்குபற்றியபோது, ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் நான்கு ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் நுவான் சொய்சா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.