காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 25 பேர் பலி!

597768
597768

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. பல்வேறு தரப்பு கிளர்ச்சியாளர்கள் பிரிவுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.

இந்த மோதல்களின் போது கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் பென்னி மாகாணத்தில் உள்ள ஒரு கிராம பகுதிக்குள் ஏடிஎஃப் என்ற கிளர்ச்சிப்படையினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த கிராம பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கிராம மக்களில் 25 பேரை கிளர்ச்சியாளர்கள் கொன்று உடலை வீசியிருப்பதை கண்ட பாதுகாப்பு படையினர் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருந்ததை கண்ட பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கிளர்ச்சியாளர்கள் கிராமப்பகுதியை விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். அந்த கிளர்ச்சியாளர்களை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.