டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கவேண்டும் – அவரால் இன்னமும் ஆபத்து – ஜனநாயக கட்சியினர் போர்க்கொடி

trump0940512
trump0940512

25திருத்தத்தை பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து டொனால்ட் டிரம்பை நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்காவில் வலுவடைந்துள்ளன.


அமெரிக்க காங்கிரசிற்குள் நுழைந்து டிரம்பின் ஆதரவாளர்கள் கலகத்தில் ஈடுபட்டதை தொடர்ந்தே இந்த வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்க செனட்டின் சிறுபான்மை தலைவர் சக்சூமர் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி பதவியிலிருந்து டொனால்ட்டிரம்பினை வெளியேற்றுவதற்காக 25திருத்தத்தினை பயன்படுத்துமாறு அவர்கள் துணை ஜனாதிபதி மைக்பென்சினை கேட்டுக்கொண்டுள்ளனர்.


இன்று காலை நாங்கள் ஜனாதிபதி கிளர்ச்சியை தூண்டியதற்காகவும்,அவரால் இன்னமும் காணப்படும் ஆபத்தை கருத்தில்கொண்டும், அரசமைப்பின் 25வது திருத்தத்தை பயன்படுத்தி அவரை பதவியிலிருந்து நீக்குமாறு வேண்டுகோள் விடுப்பதற்காக துணை ஜனாதிபதி மைக்பென்சினை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றோம் என ஜனநாயக கட்சியினர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.


25வது திருத்தம் துணை ஜனாதிபதியும் அமைச்சரவையின் பெரும்பான்மையும் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய அனுமதிக்கின்றது என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எங்களிற்கு துணை ஜனாதிபதியிடமிருந்து இன்னமும் பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் ஆபத்தான தேசத்துரோக நடவடிக்கைகள் காரணமாக அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள ஜனநாயக கட்சியினர் துணை ஜனாதிபதி எங்கள் வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பார்,அரசமைப்பிற்கும் அமெரிக்க மக்களிற்குமான சத்தியப்பிரமாணத்தை மதிப்பார் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளைஅமெரிக்க நாடாளுமன்றத்திற்கு  டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்ட சில மணிநேரத்தின் பின்னர் அமெரிக்க காங்கிரஸ் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தும் ஆவணத்தில் கைச்சாத்திட்டு அவரது வெற்றியை உறுதிசெய்துள்ளது.


கலகக்காரர்களை காவற்துறையினர் வெளியேற்றிய பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தமது மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.


அரிசோனா பென்சில்வேனியா தேர்தல் முடிவுகளை இரத்துச்செய்யவேண்டும் என குடியரசுக்கட்சியின் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்ததை நிராகரித்த பின்னர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக பைடன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என உறுதி செய்துள்ளது.

பைடன் 306 தேர்தல் கல்லூரி வாக்குகளையும் டொனால்ட் டிரம்ப் 232 தேர்தல் கல்லூரி வாக்குகளையும் பெற்றுள்ளனர்  என காங்கிரஸ் உறுதி செய்துள்ளது.


இதன் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள டிரம்ப் தேர்தல் முடிவுகளை தான் முற்றாக நிராகரிக்கின்ற போதிலும் ஜனவரி 20 திகதி அமைதியான முறையில் அதிகார மாற்றம் இடம்பெறும் என உறுதியளித்துள்ளார்.
காங்கிரஸ் உறுதி செய்துள்ளமை 20ம் திகதி பைடன் முறைப்படி பதவியேற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்த கருத்து வெளியிட்டுள்ள துணை ஜனாதிபதி மைக்பென்ஸ் இந்தவன்முறை அமெரிக்க தலைநகரின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் என தெரிவித்துள்ளார்.