எதிர்வரும் 27ஆம் திகதி திறக்கப்பட உள்ள ஜெயலலிதா நினைவிடம்!

202012300631290279 Jayalalithaa memorial to be handed over to government in SECVPF
202012300631290279 Jayalalithaa memorial to be handed over to government in SECVPF

தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் நினைவிடத்தை அமைக்க வடிவமைப்பு செய்யப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா 2018-ம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி நடந்தது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

50 கோடியே 80 இலட்ச ரூபாய் செலவில் இத்தாலி மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நினைவிடத்தை திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 27ஆம் திகதி (ஜனவரி 27) திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையில், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளாரா? என்பது குறித்த தகவல் தற்போதுவரை உறுதியாகவில்லை.