2 பேரை கத்தியால் குத்தி கொன்றவர், பாகிஸ்தான் பயங்கரவாதி

london
london

இங்கிலாந்து நாட்டின் லண்டன் பாலத்தில் இன்று சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பயங்கரவாதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் பால தாக்குதலை நடத்தியவர் 28 வயதுடைய உஸ்மான்கான் எனவும் அவரது பூர்வீகம் பாகிஸ்தான். ஆனால் அவர் பிறந்தது, லண்டன் என தெரிவிக்கப்படுகிறது. அவரது தாக்குதலில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர் பொலிஸ் அதிகாரிகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்றும் லண்டன் மாநகர பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

இவர் 2012ம் ஆண்டு, பயங்கரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர், சிறையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த கைதிகள் மறுவாழ்வு தொடர்பான மாநாட்டில் உஸ்மான்கான் கலந்து கொண்டுள்ளார்.

இணையத்தளம் மூலமாக பயங்கரவாதத்தை போதனை செய்து வந்துள்ளார். இப்போது அவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது, பயங்கரவாத தாக்குதல் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தாக்குதலின் நோக்கம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தொடர்புடைய அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என்றும் இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் யோன்சன் தெரிவித்துள்ளார்.