கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது! -பிரதமர் கவலை

boris
boris

பிரித்தானியாவில்  கொரோனாத் தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் இதற்கு முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது  கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனாத் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தவாறு காணப்படுகின்றது.

மேலும் கடந்த ஒக்டோபர்-நவம்பர் காலத்தில் லண்டன் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உருமாறிய கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

இவ்  உருமாறிய கொரோனாத் தொற்றானது  அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கூட இது மற்ற வகைகளை விட 70% வரை வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து, கடந்த சில வாரங்களாகவே கொரோனாத் தொற்றுப் பரவல் பிரித்தானியாவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக உயிரிழப்புகளும் ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், “தற்போது நாம் இழந்துள்ள ஒவ்வொரு உயிருக்காகவும் நான் வருந்துகிறேன். ஒரு பிரதமராக இந்த அரசு எடுத்து அனைத்திற்கும் நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.