90 பேரை பலிகொண்ட தாய்லாந்து பயணிகள் விமான விபத்து

13
13

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியர்கள் உள்ளிட்ட 90 பேரை பலிகொண்ட தாய்லாந்து பயணிகள் விமான நிறுவன தலைமை நிர்வாகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாரிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குறித்த விமானத்தில் பயணம் மேற்கொண்டு பலியான 9 பிரான்ஸ் நாட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கிலேயே பாரிஸ் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தாய்லாந்தின் One-Two-Go விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவரான Udom Tantiprasongchai என்பவர் இந்த வழக்கில் குற்றவாளி என பாரிஸ் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 75,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Udom Tantiprasongchai ஐ கைது செய்ய சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.மட்டுமின்றி பிரஞ்சு நீதித்துறை அழைப்பாணைகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.இந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்ட 9 பிரெஞ்சு நாட்டவர்கள் அளித்த புகாரில், விமானத்தை ஃபூகெட் தீவில் அவசரமாக தரையிறக்கியதே பெரும் விபத்தை ஏற்படுத்த காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு, செப்டம்பர் 16 ஆம் திகதி, 8 பிரித்தானியர்கள், 5 அமெரிக்கர்கள், 9 பிரஞ்சு குடிமக்கள் உள்ளிட்ட 123 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் தரையிறங்கிய தாய்லாந்து One-Two-Go விமான சேவை நிறுவனத்தின் விமானமானது, புயல் காற்றில் சிக்கி, ஓடு தளத்தில் இருந்து தடுமாறி விலகி, தீப்பற்றியுள்ளது. இதனால் விமானி தீவுப்பகுதியில் அவசரமாக தரையிறக்கியுள்ளார்.
இந்த விபத்தில் சிக்கி தாய்லாந்து நாட்டவர்கள் 33 பேரும் வெளிநாட்டவர்கள் 57 பெர் என 90 பேர் உடல் கருகி பலியாகினர். விமானத்தில் பல கோளாறு இருந்ததாகவும், அதிக நேரம் பணியாற்றியதால் விமானியும் களைப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது,

இந்த காரணங்களை விமான சேவை நிறுவனம் மறைத்துள்ளது எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பாரிஸ் நீதிமன்றம் முன்னெடுத்த விசாரணையில், குறித்த விமானியால் பல தவறுகள் நிகழந்துள்ளது அம்பலமானது.
குறித்த விபத்துக்கு பின்னர் One-Two-Go நிறுவனத்தின் விமான சேவைகள் காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.