நமீபியாவின் புதிய ஜனாதிபதியாக ஜெயிங்காப்

04
04

தென்மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஹேக் ஜெயிங்காப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆளும் நமீபிய தென் மேற்கு ஆபிரிக்கா மக்கள் அமைப்பின் வேட்பாளரும், ஜனாதிபதியுமான 78 வயதான ஹேக் ஜெயிங்காப் 56 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எனினும், இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த வாக்கு விகிதத்திலேயே ஹேக் ஜெயிங்காப் வெற்றிபெற்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதல் தடவை தெரிவின் போது 87 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தென் ஆபிரிக்காவிடமிருந்து கடந்த 1990ஆம் ஆண்டு நமீபியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் கட்சி, இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் 70 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றே வெற்றி பெற்று வந்துள்ளது.

ஜெயிங்காப்புக்கு அடுத்தபடியாக, இளைஞர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ள சுயேச்சை வேட்பாளார் பாண்டுலேனி இடுலா 29 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.