பசிக்கொடுமை-மண்ணை அள்ளி தின்ற குழந்தைகள்!!

kerala
kerala

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 குழந்தைகள் பசிக் கொடுமையால் அழுதபடி தரையில் கிடந்த மண்ணை அள்ளித் தின்றுகொண்டிருந்த ஒரு வீடியோ காட்சி வட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

இதுபற்றிய தகவல் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்து ஸ்ரீதேவி எனும் குறித்த தாயிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

ஸ்ரீதேவிக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீதேவியின் கணவர் மதுபோதைக்கு அடிமையானவர். கூலி வேலை மூலம் கிடைக்கும் பணத்தை அவர் ஸ்ரீதேவியிடம் கொடுப்பது இல்லை.

இதனால் தாயும், குழந்தைகளும் பல நாட்களாக பசியால் வாடி, வதங்கி வருகிறார்கள். 3 மாத குழந்தைக்கு தாய்பால் கொடுக்கக்கூட முடியாத அளவுக்கு ஸ்ரீதேவியின் உடல்நிலை இருந்தது.

இதனால் பசியால் வேறு வழியில்லாமல் அவரது குழந்தைகள் மண்ணை அள்ளி தின்றுள்ளன. இந்த கொடுமையை கேட்டு அதிகாரிகள் அதிச்சியடைந்துள்ளனர்.

அத்துடன் அவரது வீட்டில் பல நாட்களாக அங்கு உணவு தயாரித்த அறிகுறியே இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. அங்குள்ள அடுப்பில் சுடுநீர் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது. இதனால் அவர்களுக்கு உதவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அவரது 2 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் தாயின் அனுமதியுடன் அரசு காப்பகத்தில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 குழந்தைகளும் மிகவும் சிறுவயது என்பதால் தாயின் பராமரிப்பு அவசியம் கருதி அவரிடம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு மாநகராட்சி குடியிருப்பில் ஸ்ரீதேவி குழந்தைகளுடன் வசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஸ்ரீதேவியின் கணவரை அதிகாரிகள் தேடிப்பிடித்த போது அவர் மதுபோதையில் இருந்தார். அவருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்கி உள்ளனர்.

இவ்வாறாக தன்னை நம்பி குடுத்தனம் நடாத்துகின்ற மனைவியிற்கும் அவரது குழந்தைகளிற்கும் ஒரு வேளை உணவு கொடுக்க முடியாத குறித்த சில ஆண் வர்க்கத்தினரின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த ஆண் வர்க்கமும் வெட்கி தலைகுணிய வேண்டிய நிலையில் உள்ளனர்.

இவ்வாறான குடும்பங்களின் வாழ்க்கையினை வைத்து அரசியல் செய்யாது இவை போன்ற பல்வேறு குடும்பங்கள் அரசியல்வாதிகளின் தொகுதிகளிலும் காணப்படலாம். அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏழை குடும்பங்களின் வாழ்க்கையை உயர்த்துவதே அவர்களின் கடமை.

அத்துடன் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துகின்ற இக்காலத்தில் இவை போன்ற துயரங்களை ஒளிப்பதிவு செய்து மக்கள் மத்தியில் கொண்டு சென்று, அவற்றினை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு தூண்டுகோளாக அமைபவர்களின் செயல்கள் பாராட்டத்தக்கது. இவை போன்ற நற்செயல்கள் அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் அவாவாகும்.