ஈரானில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்!

vikatan 2020 07 726d8691 8fcd 41b5 b209 6710da0d20b4 p74d
vikatan 2020 07 726d8691 8fcd 41b5 b209 6710da0d20b4 p74d

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முன்னணி நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பல்வேறு நாடுகளில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

அவ்வகையில், ஈரான் நாட்டில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி மருத்துவமனையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் தாதிகளுக்கு முதல் டோஸ் மருந்து செலுத்தப்பட்டது.

சுகாதார பணியாளர்களின் தியாகத்தின் நினைவாக, கொரோனாவுக்கு எதிரான தேசிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கியிருப்பதாக அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

ரஷியாவிடம் இருந்து 20 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது ஈரான். இதில் முதல்கட்ட மருந்துகள் கடந்த வியாழக்கிழமை வந்தன. அடுத்து வரும் 18 மற்றும் 28ம் திகதிகளில் மீதமுள்ள மருந்துகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானில் இதுவரை 14 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 58,600 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 100க்கும் குறைந்துள்ளது. ஜூன் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக 100க்கும் குறைவான உயிரிழப்பு பதிவாகி வருகிறது. ஆனாலும், நிலைமை மோசமாக இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.