மியன்மார் அரசு இனப்படுகொலையில் ஈடுபடவில்லை

ang sang sooki
ang sang sooki

மியான்மாரின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் 2012ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற இராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மியான்மாரின் முஸ்லிம் மக்களை முற்றிலுமாக அழித்துவிடும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டதாக தெரிவித்து இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான காம்பியா அரசின் சார்பில் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மியான்மர் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த ‘ஜன்டா’ தலைமையிலான இராணுவ ஆட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்டு 2016ல் பாராளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மியான்மார் அரசியல் சட்டப்படி ஆங் சான் சூகி நாட்டின் அதிபரை தெரிவு செய்கின்ற தேர்தலில் போட்டியிட முடியாது எனும் காரணத்தினால் தனது நம்பிக்கைக்குரியவரான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ் மியான்மார் நாட்டின் அதிபராக பதவி ஏற்றார்.

அரசின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூகி இருந்து வருகிறார்.

இந்நிலையில் மியன்மார் இனவழிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்து சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் காம்பியா நாட்டின் சார்பில் நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்கப்பட்டு மியன்மார் மியான்மார் அரசின் மீதும் ஆட்சியின் தலைவராக விளங்கும் ஆங் சான் சூகி மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டது.

இன்றைய தினம் சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த விசாரணையில் மியான்மார் அரசின் சார்பில் ஆங் சான் சூகி ஆஜராகி வாதாடினார்.

நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே மியான்மர் இராணுவம் ஈடுபட்டதாகவும் முழுமையற்றதும் தவறானதுமான சில தகவல்களை இந்த நீதிமன்றத்தில் காம்பியா அரசு சமர்ப்பித்துள்ளது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில் சில பகுதிகளில் இராணுவ வீரர்கள் அதிகப்படியான பலப்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை போதுமான முறையில் தெளிவாக கண்டுபிடிக்க அவர்கள் தவறி இருக்கலாம்.

இதுதொடர்பாக மியான்மார் அரசு விசாரணை நடத்தி வருகிறது. எனவே, இந்த சூழலில் இராணுவ நடவடிக்கையில் இனப்படுகொலை என்ற நோக்கம் இருந்ததாக மட்டுமே கருதிவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.