தமிழகத்தில் தேர்தலுக்காக பயன்படுத்தப்படவிருந்த பணம், தங்கம் பறிமுதல்

download 13 1
download 13 1

இந்தியா, தமிழக சட்டமன்றத் தேர்தலானது இன்று நடைபெறுகின்றது.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் மொத்தம் 3,998 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 300 துணை இராணுவப் படையினர் உட்பட ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 3,998 வேட்பாளர்களும் கன்னியா குமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைந்த நிலையில், தொகுதிக்கு தொடர்பில்லாத அனைவரையும் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 537 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 10,183 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்களாக 4 லட்சத்து 17,521 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 8,014 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

பணியாளர்கள் அனைவருக்கும் கவச உடை, இறப்பர் கையுறை, முகக் கவசம், திரவ கிருமிநாசினி உள்ளிட்ட 11 வகையான பொருட்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கப்பட்டுள்ளன.

இம்முறை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி அவர்கள் மாலை 6 மணிக்கு மேல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்தல் வாக்குப் பதிவு நாளான இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்திலிருந்து 428 கோடி இந்திய ரூபா பெறுமதியான ரொக்கம் மற்றும் தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவற்றுள் 225.5 கோடி இந்திய ரூபா ரொக்கமாகவும், 176.11 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் உள்ளிட்ட விலை மதிப்பற்ற உலோகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி சோதனை நடவடிக்கையின்போது மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளது.

தேர்தல்களுக்கு முன்னதாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.