சுயஸ் கால்வாய் கப்பல் நிறுவனத்துடன் எகிப்து பேச்சுவார்த்தை!

download 3 2
download 3 2

சுமார் ஒரு வாரகாலமாக முக்கியமான நீர்வழிப்பாதையைத் தடுத்த ஒரு பாரிய கப்பலின் உரிமையாளர்களுடன் நிதி தீர்வு குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சுயஸ் கால்வாய் போக்குவரத்து தலைவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அதன்படி ஜப்பான் ஷூய் கிசென் கைஷா லிமிடெட் என்ற எவர் கிவன் கப்பலின் உரிமையாளர்களிடமிருந்து நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இல்லாது இப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று சுயஸ் கால்வாய் போக்குவரத்து தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் நீதித்துறையை நாடாமல் இந்த விடயத்தில் ஒரு அமைதியான தீர்மானத்தை எட்ட அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இந்த விடயத்தை நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுவருவது கால்வாயின் நிர்வாகத்துடன் தீர்வு காண்பதை விட கப்பல் நிறுவனத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்” என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் சுயஸ் கால்வாய் ஆணையகம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பீட்டை எதிர்பார்க்கிறது என்று கால்வாய் போக்குவரத்து தலைவர் கூறினார்.

அது மாத்திரமன்றி சேதங்கள் தொடர்பான பிரச்சினை சட்ட மோதலாக மாறினால் கப்பலை கால்வாயிலிருந்து வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

இழப்பீடாக கோரப்பட்ட குறித்த தொகை காப்பு நடவடிக்கை, நிறுத்தப்பட்ட போக்குவரத்தின் செலவுகள் மற்றும் எவர் கிவன் கால்வாயைத் தடுத்த வாரத்திற்கான போக்குவரத்து கட்டணங்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

இந் நிலையில் பாரிய சரக்குக் கப்பல் தற்போது கால்வாயின் ஏரிகளில் ஒன்றில் உள்ளது, அங்கு அதிகாரிகள் மற்றும் கப்பலின் மேலாளர்கள் கப்பல் சிக்குண்டமைக்கான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

செவ்வாயன்று புலனாய்வாளர்கள் கப்பலின் கருப்பு பெட்டி என்றும் அழைக்கப்படும் வோயேஜ் டேட்டா ரெக்கார்டரிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்துள்ளதாக ராபி கூறினார்.