மியன்மார் நெருக்கடியை சர்வதேசம் தீர்க்க வேண்டும்!

download 4 3
download 4 3

அண்மையில் மியன்மாரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு, அதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மனித உரிமைகள் நிலவரம் ஆகியவை தொடர்பில் தென்கொரியாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் எச்.டபிள்யூ.பி.எல் என்ற அரச சார்பற்ற அமைப்பு அதன் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி தற்போது மியன்மாரில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வுகாண்பதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவ்வமைப்பு அழைப்புவிடுத்திருக்கிறது.

மேற்படி அமைப்பினால் ‘மியன்மாரில் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் மனித உரிமைகள் ‘ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் இந்த நெருக்கடிக்கான தீர்வு எட்டப்படுவதை அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கவேண்டும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வன்முறைகளின்றி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் காயமடைந்தும் இருக்கிறார்கள்.

ஆகவே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடைப்படையில் இந்த நெருக்கடிக்கான தீர்வை எட்டுவதற்கு முயற்சிக்குமாறு மியன்மாரின் அனைத்துத்தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.